நூன்மரபு

5. மயக்கம்

வினா வெழுத்துக்கள்

32.ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.

ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா ( மேல் நெட்டெழுத்து என்னப்பட்ட) ஆஏஓ என்னும் அம்மூன்றும் வினா என்னும் குறியவாம்.

எ - டு: உண்கா, உண்கே, உண்கோ சாத்தா எனவரும்.

`தன்னின முடித்தல்' என்பதனால் எகாரமும் யகர ஆகாரமும் வினாப் பெறுமெனக் கொள்க. இக்குறிகளையும் முன் குறிலென்றும் நெடிலென்றும் கூறியவழியே கூறுகவெனின், இவை சொல் நிலைமையிற் பெறும் குறியாகலின் ஆண்டு வையாது மொழி மரபினைச் சார வைத்தார் என்க. இக்குறி மொழி நிலைமைக்கேல் எழுத்தின் மேல் வைத்துக்கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லனவற்றிக்குக் கருவி செய்யாமையின் என்க.

(32)