இஃது, அவ் வெண்ணின் முன்னர் அளவுப்பெயர் நிறைப் பெயர் வந்தால் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அளவும் நிறையும் வேற்றுமை இயல-ஆயிரத்துமுன் அளவும் நிறையும் வந்தால் இவ்வீற்று வேற்றுமை இயல்பாய் மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு :ஆயிரக்கலம்; சாடி, தூதை, பானை எனவும்; ஆயிரக்கழஞ்சு : தொடி,பலம் எனவும் ஒட்டுக. இம் மாட்டேற்றானே, மேல் "துவர" (சூத்திரம் - 15) என்ற இலேசினான், இயல்புகணத்துக்கட்கு எய்திய மகரம் ஈண்டும் கெடுத்துக் கொள்க. ஆயிரநாழி; வட்டி,அகல் என வரும். பதினாயிரக்கலம் என்றாற்போல அடையடுத்து வந்த வழியும் ஒட்டுக. (24)
|