இஃது, இவ்வீற்றுட் சில உயர்திணைப்பெயரும் விரவுப் பெயரும் உருபியலுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் முடியுமென உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் நிலைக்கிளவியும் - எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும் எல்லீரும் என்னும் முன்னிலைப்பெயரும் கிளைத்தொடர்ச்சிப்பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியும் தாம் நாம் யாம் என்னும் பெயரும்,வேற்றுமையாயின் உருபு இயல் நிலையும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின் உருபு புணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நின்று, சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையும் ஈறும் சாரியை பெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் முடியும். அ வயின் மெல்லெழுத்து மிகுதல் ஆன - அந் நெடுமுதல் குறுகு மொழிக்கண் மெல்லெழுத்து மிகும். எ - டு : எல்லார்தங்கையும், எல்லீர், நுங்கையும் : செவியும், தலையும், புறமும் எனவும்; தங்கை, நங்கை, எங்கை, - செவி, தலைபுறம் எனவும் ஒட்டுக. `வேற்றுமையாயின்' என்றதனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் இயல்புகணத்து ஞகரமும் நகரமும் வந்தவழி தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் ஈறு கெடுதல் கொள்க. `ஆவயி னான' என்றதனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் ஞகரமும் நகரமும் வந்துழி அவை மிகுதலும் தொடக்கம் குறுகும் பெயர்க்கும் அஞ்ஞகரமும் நகரமும் வந்துழி மகரங்கெட்டு அவை மிகுதலுங் கொள்க. எல்லார் தஞ்ஞாணும், எல்லீர் நுஞ்ஞாணும், நூலும் ; எனவும்; தஞ்ஞாண் ; நஞ்ஞாண் ; எஞ்ஞாண் : நூல் எனவும் வரும். இன்னும் `ஆவயினான ' என்றதனால். படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் சாரியை பெறாது இறுதி உம்முப்பெறுதலும் கொள்க. எல்லார்கையும், எல்லீர்கையும் ; செவியும். தலையும் புறமும் என வரும் . இன்னும் அதனானே, உருபீற்றுச்செய்கை யெல்லாம் கொள்க. தம்காணம்1 என வரும். (25)
1. தம்காணம்,அகர உருபெற்றது
|