1. மெல்லொற்று ஈறுகள்

அல்வழியில் அவை

322.அல்லது கிளப்பின் இயற்கை யாகும்.

இஃது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அல்லது கிளப்பின் இயற்கை ஆகும் - மேற் கூறிய படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர்நிலைக்கிளவியும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும்.

ஈண்டு இயல்பென்பது சாரியை பெறாமை நோக்கி, இவற்றின் ஈறு திரிதல் " அவ்வழியெல்லாம் " (சூத்திரம் 19) என்றதனுள் " எல்லாம்" என்னும் இலேசினாற் கொள்க.

எ - டு : எல்லாருங் குறியர், சிறியர், தீயர், பெரியர் எனவும்; எல்லீருங்குறியீர்; சிறியீர், தீயீர், பெரியீர் எனவும், தாம் குறியர்; சிறியர், தீயர், பெரியர் எனவும்; நாங்குறியேம்; சிறியம், தீயம், பெரியம் எனவும்; யாங்குறியேம்; சிறியேம், தீயேம், பெரியேம் எனவும் வரும்.

இன்னும் "எல்லாம்" என்னும் இலேசினானே, இவ்வீற்றுக்கண் மென்கணத்து மகரம் ஒழிந்தன வந்தவழி மகரம் அவ்வொற்றாய்த் திரிதலும் கொள்க. எல்லாருஞ் ஞான்றார்; நீண்டார் எனவும்; எல்லீருஞ் ஞான்றீர்; நீண்டீர் எனவும்; தாஞ்ஞான்றார்; நீண்டார் எனவும்; நாஞ்ஞான்றாம்; நீண்டாம் எனவும்; யாஞ்ஞான்றேம்; நீண்டேம் எனவும் கொள்க.

(26)