1. மெல்லொற்று ஈறுகள்

`எல்லாம் என்னும் விரவுப்பெயர்

323.அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபிய நிலையும்
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது.

இஃது, அவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்- அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியிடத்தும். எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - எல்லாம் என்னும் விரவுப்பெயர்1 உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச்சாரியையும் இறுதி உம்முச் சாரியையும் பெற்று முடியும். வேற்றுமை அல்வழி சாரியை நிலையாது -அப்பெயர் வேற்றுமையல்லாத இடத்துச் சாரியை பெறுதல் நிலையாதாயே முடியும்.

மாட்டேறு ஏலாத அல்வழியினையும் உருபியலோடு மாட்டெறிந்து விலக்கிய மிகுதியான், அல்வழிக்கண் வன்கணத்திறுதி உம்முப்பேறும் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப் பேறும். மென்கணத்து மகரக்கேடும், பண்புத்தொகைக்கண் மகரக் கேட்டோடு இறுதி உம்முப்பேறும் கொள்க.

எ - டு : எல்லாகுறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாவற்றுக்கோடும்; செவியும், தலையும், புறமும் எனவும்; எல்லா ஞான்றன; நீண்டன, மாண்டன எனவும்; எல்லா ஞாணும்; நூலும், மணியும் யாப்பும், வலிமையும், அடையும், ஆட்டமும் எனவும் எல்லாவற்று ஞாணும் ; நூலும், மணியும் யாப்பும், வலிமையும் , அடைவும், ஆட்டமும் எனவும் வரும்.

எல்லாக் குறியரும் ; சிறியரும், தீயரும், பெரியரும் என உயர்திணைக்கண்ணும் ஒட்டுக.

ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகரக்கேடு வற்றின்மிசை ஒற்றாய்க் கெட்டது. இது விரவுப்பெயராகலின், ஈற்றுப் பொது முடிவிற்கு ஏலாதென்று சாரியை வல்லெழுத்துக் கொள்ளப்பட்டது.

(27)

1.எல்லாம் என்பது, எல்லா மாந்தரும், எல்லா மரமும், மாந்தரெல்லாம், மரமெல்லாம் என, நிலைமொழியாயும் வருமொழியாயும் இருதிணையிலும் செல்லுதலின் விரவுப் பெயராயிற்று. எல்லாம் என்னும் தன்மைப்பன்மைப் பெயரும், எல்லாம் என்னும் விரவுப்பெயரும் வெவ்வேறு. (பாவாணர்)