இஃது, மேலதற்கு உயர்திணை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) உயர்திணையாயின் உருபு இயல் நிலையும் - அவ்வெல்லாமென்பது அஃறிணைப்பெயராயன்றி, உயர்திணைப் பெயராய் நின்ற நிலைமையாயின் உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று ஆண்டுக் கூறிய நம்முச்சாரியை பெற்று முடியும். வற்றுவகுத்து செய்கை மேல் வகுத்தமையின், மகரக்கேடு கொள்க. இறுதி உம்மையும் அச்செய்கை மேலே வகுத்தமையிற் கொள்க. எ - டு : வல்லாநங்கையும்; செவியும், தலையும், புறமும் என வரும். மேல் "மான மில்லை" (சூத்திரம் - 28) என்றதனால் , அல்வழிக் கண் வன்கணத்து மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும் . இயல்புகணத்துக்கண் மகரம் கெட்டு இறுதி உம்முப்பெற்று முடிதலும் கொள்க . எல்லாக்கொல்லரும் , சேவகரும் , தச்சரும் , புலவரும் எனவும் ; எல்லாஞாயிறும் ; நாயகரும் , மணியகாரரும், வணிகரும் , அரசரும் எனவும் வரும் . (29)
|