இதுவும் அவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று . (இ-ள்) நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - நும் என்று சொல்லப்படுகின்ற ஓர் விரவுப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் . எ - டு : நுங்கை ; செவி, தலை, புறம் என வரும் . மகரம் "துவர" (சூத்திரம் - 15) என்ற இலேசினாற் கெட்டது . `ஒரு பெயர்' என்றதனான் , ஞகர நகரங்கள் வந்த இடத்தும் அவ்வொற்று மிகுதல் கொள்க. நுஞ்ஞாண் , நுந்நூல் என வரும் . `ஒன்றின முடித்தல்' என்பதனால் , உங்கை என உம் என்பதன் முடிபும் இவ்வீற்றாகக் கொள்க. (30)
1. நும் என்பது நூம் என்னும் வழக்கற்ற பழம்பெயரின் வேற்றுமைக் குறுக்கம். எம் தம் என்னும் பிறவிடக் குறுக்கங்கள் போன்றே நும் என்பதும் உருபுபெற்றும் பெறாதும் ஆறாம்வேற்றுமைப் பொருள் தரும் . ( பாவாணர் .)
|