1. மெல்லொற்று ஈறுகள்

மகர ஈற்றுத் தொழிற்பெயர்

328.தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.

இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கண் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல - மகரவீற்றுத் தொழிற்பெய ரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பினவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம் பெற்றும் வரும் .

எ - டு : செம்முக்கடிது ; சிறிது , தீது , பெரிது , எனவும் ; செம்மு ஞான்றது ; நீண்டது , மாண்டது , வலிது எனவும் ; செம்முக்கடுமை ; சிறுமை , தீமை , பெருமை எனவும் ; செம்முஞாற்சி , நீட்சி , மாட்சி , வலிமை எனவும் வரும் .

`எல்லாம்' என்றதனான் , உகரம்பெறாது அல்வழிக்கண் நாட்டங் கடிது என , மெல்லெழுத்தாய்த் திரிவனவும் ; வேற்றுமைக்கண் நாட்டக்கடுமை என மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கு வருவனவும் கொள்க.

(32)