1. மெல்லொற்று ஈறுகள்

`ஈம்' `கம்' `உரும்' என்னும் பெயர்கள்

329.ஈமுங் கம்மும் உருமென் கிளவியும்
ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன.

இது, பொருட்பெயருட் சில அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் தொழிற் பெயரோடு ஒத்து முடியுமெனக் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் ஆ முப்பெயரும்-ஈம் என்னும் சொல்லும் கம் என்னும் சொல்லும் உரும் என்னும் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், அவற்று ஓர் அன்ன - அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் அத் தொழிற்பெயரோடு ஒரு தன்மையவாய் வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம் பெற்றும் முடியும்.

எ - டு : ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது1; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.

(33)

1.ஈம்-இடுகாடு, கம்- கம்மியரது தொழில், உரும் - இடி.