இஃது, எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டு நிற்கும் இடம் இது வென்பது உணர்த்துதல் நுதலிற்று. அளபு இறந்து உயிர்த்தலும்- ( உயிரெழுத்துக்களெல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக்கடந்து ஒலித்தலையும், ஒற்று இசை நீடலும்- ஒற்றெழுத்துக்கள் தம் மொலிமுன் கூறிய அளபின் நீடலையும் இசையோடு சிவணிய நரம்பின் மறைய-(இந்நூலுட் கூறும் விளியின் கண்ணேயன்றிக்) குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினது இசை நூற்கண்ணும், உள என மொழிப என்மனார்புலவர்- உள எனச் சொல்லுவர் அவ்விசை நூலாசிரியர் என்று சொல்லுவர் புலவர். ஒற்றிசை நீடலும் என்றனர், அளபிறந்துயிர்த்த லென்றது அதிகாரத்தால் நின்ற உயிர்மேற் சேறலின் உளவென்றது அந்நீட்டிப்பு ஒரு தலையன்றென்பது விளக்கிற்று. இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமேயெனினும், `மொழிப', என வேறொருவர் போலக்கூறியது. அதுவும் வேறு ஒரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும் `மறையும் என்பதன் உம்மை விகாரத்தால் தொக்கது, அகரம் செய்யுள் விகாரம். (33) முதலாவது நூன் மரபு முற்றிற்று.
1. சிவணிய என்பது தொழிற் பெயர். இசையோடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றாம்.நரம்பு என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று.மறை என்றது நூலை. மொழிப என்றும் என்மனார் புலவர் என்றும் இருகாற் கூறியவதனால் இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று.என்னை?செய்யுளியலுட் கூறிய `மாத்திரையளவும்' என்னும் சூத்திரத்தில் `மேற்கிளந்தன்ன' (செய்-2) என்னும் மாட்டேற்றிற்கு இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம் இன்மையின் இவ்விலக்கணம் கூறாக்காற் செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது.அவை உரைச்செய்யுட் போல நிற்றலின் இவ்விலக்கணம் கூறவே வேண்டுமென்று உணர்க. (நச்)
|