1. மெல்லொற்று ஈறுகள்

`ஈம்' `கம்' இருபெயர்க்கும் சாரியை

330.வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை.

இது, மேல் முடிபுகூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்றுமைக் கண் வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் அக்கு என் சாரியை தோற்றம் வேண்டும் - இறுதி உரும் ஒழிந்த இரண்டும் அக்கு என்னும் சாரியை தோற்றி முடிதல் வேண்டும்.

`தோற்றம்' என்றதனான் உகரம் நீக்குதல் வேண்டுமென்க.

எ - டு : ஈமக்குடம், கம்மக்குடம்; சாடி, தூதை, பானை என வரும்.

மேல் வேற்றுமை கூறிய முடிபு குணவேற்றுமைக்கண்ணதென்றும், ஈண்டுக் கூறிய முடிபு பெருட்பெயர்க்கண்ணதென்றும் கொள்க.

(34)