1. மெல்லொற்று ஈறுகள்

மகர ஈற்று நாட்பெயர்

332.நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்.

இஃது, இவ்வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நாள்பெயர்க் கிளவி மேல் கிளந்து அன்ன - மகர வீற்று நாட்பெயர்ச்சொல் மேல் இகரவீற்று நாட்பெயரிற் கிளந்த தன்மையவாய் ஆன் பெற்று முடியும்; அத்து ஆன் மிசையும் வரை நிலை இன்று - அத்துச்சாரியை அவ்வான்சாரியை மேலும் பிற சாரியை மேலும் நீக்கும் நிலைமையின்றாம்; ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர் - அவ்விடத்து மகரவொற்றுத் தம் வடிவு கெடுக வென்று சொல்லுவர் புலவர்.

எ - டு : மகத்தாற் கொண்டான்; மகத்துஞான்று கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும்.

`ஒற்று' என்னாது `மெய்' என்றதனான் , நாட்பெயரல்லாத பொருட் பெயர்க்கண்ணும் அம்முடிபு கொள்க. மரத்தாற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும்.

(36)