1. மெல்லொற்று ஈறுகள்

சில னகர ஈற்றுச் சொற்கள்

334.மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும்
பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.

இஃது, அவ்வீற்று அசைநிலை இடைச்சொல்லும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன் என்னும் சொல்லும் சின் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும் ஈன் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் முன் என்னும் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும் , அன்ன இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பினவாய் னகரம் றகரமாய் முடியும் என்று சொல்லுவர் புலவர்.

எ - டு : அதுமற் கொண்கன் றேரே , காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் எனவும் ; ஆற்கொண்டான் , ஈற்கொண்டான் , புற்கொண்டான் , முற்கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் எனவும் ; வரிற்கொள்ளும் ; செல்லும் , தரும் , போம் எனவும் வரும் .

பெயராந் தன்மையவாகிய ஆன் , ஈன்1 என்பனவற்றை முற்கூறாததனான் , ஆன்கொண்டான் , ஈன்கொண்டான் எனத் திரியாது முடிதலும் கொள்க.

பின் , முன் என்பன பெயர் நிலையும் வினையெச்ச நிலையும் உருபு நிலையும் படும் . அவற்றுள் வினையெச்சநிலை ஈண்டு வினையெஞ்சு கிளவியும் என்பதனான் முடியும் . உருபுநிலை உருபியலுள் முடியும் . ஈண்டுப் பெயர் கூறுகின்றது . அப்பெயரை முன்கூறாததனால் பின் கொண்டான் , முன்கொண்டான் எனத் திரியாமையும் கொள்க.

`இயல' , என்றதனான் , ஊன் என்னும் சுட்டு ஊன்கொண்டான் என இயல்பாய் முடிதல் கொள்க.

(38)

1. ஆன் - அங்கு , ஈன் - இங்கு , ஊன் - உங்கு , உவ்விடம்.