இஃது , இவ்வீற்றுள் ஒருசார் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்திநின்ற இடைச்சொல்லிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வயின் என்னும் சொல்லும் எகரமாகிய முதலையுடைய வயின் என்னும் சொல்லும் , அ பண்பு நிலையும் இயற்கைய என்ப - மேல் றகரமாய் முடியுமென்ற அப்பண்பு நிலைபெற்று முடியும் இயற்கையுடைய என்று சொல்லுவர் . எ - டு : அவ்வயிற்கொண்டான் , இவ்வயிற்கொண்டான் , உவ்வயிற் கொண்டான் , எவ்வயிற்கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் என வரும் . `இயற்கைய' என்றதனால் , திரியாது இயல்பாய் முடிவனவும் கொள்க . கான்கோழி என வரும் . (39)
|