1. மெல்லொற்று ஈறுகள்

கிளைப்பெயர்

339.கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல.

இஃது , இவ்வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல - னகாரவீற்றுக் கிளைப்பெயரெல்லாம் ணகாரவீற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும்.

         எ - டு : எயின்குடி ; சேரி , தோட்டம் , பாடி என வரும்.

`எல்லாம்' என்றதனான் , அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று எயினக்கன்னி என முடிதலும் , பார்ப்பனக்கன்னி என நிலைமொழி திரிந்து அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும் , இனிச்சாரியை பெறாது திரிந்து வேளாண்குமரி , வேளாண் வாழ்க்கை என முடிதலும் கொள்க.

(43)