1. மெல்லொற்று ஈறுகள்

`தேன்' என்னும் சொல்

341.தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை.

இதுவும் அது .

(இ-ள்) தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் - தேன் என்னும் சொல் வல்லெழுத்து முதன்மொழியாய் வந்து பொருந்தின் , மேல்நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - மேல் மீன் என்னும் சொல்லிற்குச் சொன்ன திரிபுறழ்ச்சியின் நிலைமையை யொத்து முடிதலும் வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய அம் முறையையுடைய இரண்டினையும் உரித்தாதலையும் உடைத்து ; வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை - வல்லெழுத்து மிகுமிடத்து நிலைமொழியிறுதி னகரவொற்று நிலையின்றிக் கெடும் .

`உரிமையும்' என்றவும்மை "மெல்லெழுத்து மிகினும்" (சூத் - 342) என மேல்வருகின்ற முடிவினை நோக்கி நின்றது .

எ - டு : தேன்குடம் , தேற்குடம் , சாடி , தூதை , பானை , எனவும் ; தேக்குடம் ; சாடி , தூதை , பானை எனவும் வரும்.

(45)