இது , மேலதற்கு மென்கணத்துக்கண் தொகைமரபிற் கூறிய முடிபு ஒழிய வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும் - அத் தேன் என் கிளவி மெல்லெழுத்து முதல்மொழி வந்து இயையின் நிலைமொழியிறுதி னகார வொற்றுக்கெடுதலும் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும் . எ - டு : தேன்ஞெரி , தேஞெரி ; நுனி , முரி எனக் கொள்க. மேல் "மான மில்லை" (சூத்திரம் - 49) என்றதனான் , இறுதியோடு உறழும் என்ற ஈறுகெட்டு வருமொழி மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் உறழ்தற்கும் . வருமொழி மிகாது இறுதிகெட்டும் கெடாதும் உறழ்தற்கும் , அவ்விரண்டற்கும் உரித்தாய்ச் சென்றதனை விலக்கி வருமொழி மிகாதே நிற்ப அவ்வீறே கெட்டும் கெடாதும் நின்று உறழுமென்பது கொள்ளப்பட்டது. அதன்மேல் "ஆமுறை" (சூத்திரம் - 45) என்றதனான் , சிறு பான்மை ஈறு கெட்டுத் தேஞ்ஞெரி , நுனி , முரி என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க. (47)
|