1. மெல்லொற்று ஈறுகள்

`மின்' `பின்' `பன்' `கன்' என்னும் சொற்கள்

346.மின்னும் பின்னும் பன்னுங் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல.

இஃது , அவற்றுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அநால் சொல்லும் - மின் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் பன் என்னும் சொல்லும் கன் என்னும் சொல்லுமாகிய அந்நான்கு சொல்லும் , தொழிற்பெயர் இயல - வேற்றுமைக்கண்ணும் அல்வழிக் கண்ணும் ஞகரவீற்றுத் தொழிற்பெயர்போல வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் மென்கணத்துக் கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் உகரமும் பெற்று முடியும் .

எ - டு : மின்னுக்கடிது , பின்னுக்கடிது , பன்னுக்கடிது , கன்னுக்கடிது , சிறிது , தீது , பெரிது , ஞான்றது , நீண்டது , மாண்டது , வலிது , யாது எனவும் ; மின்னுக்கடுமை , பின்னுக்கடுமை , பன்னுக்கடுமை , கன்னுக்கடுமை ; சிறுமை , தீமை , பெருமை , ஞாற்சி , நீட்சி , மாட்சி , வலிமை , யாப்பு எனவும் வரும் .

"தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெயரியல" என்று ஓதாது இவ்வாறு எடுத்தோதியவதனால் , இம் முடிபினைத் தொழிற்பெயர்க்கும் பொருட்பெயர்க்கும் உடன் கொள்க . மின் என்பது ஓர் தொழிலுமுண்டு ; பொருளுமுண்டு , பிறவும் அன்ன.

(50)