இது , மேல் முடிபு கூறியவற்றுள் ஒன்றற்கு வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) கன் என் கிளவி வேற்றுமையாயின் - கன் என்னும் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் , ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - ஒழிந்த மரமல்லா எகினொடு தோற்றம் ஒத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் . எ - டு : கன்னக்குடம்1, சாடி , தூதை , பானை, ஞாற்சி , நீட்சி , மாட்சி , வலிமை என வரும் . சிறுபான்மை கன்னக்கடுமை என்று குணவேற்றுமைக்கண்ணும் இம் முடிபு கொள்க. `தோற்றம்' என்றதனால் , அல்வழிக்கண் அகரமும் , வன்கணத்துக்கண் மெல்லெழுத்தும் கொள்க . கன்னங்கடிது ; சிறிது , தீது , பெரிது , ஞான்றது , நீண்டது , மாண்டது , யாது , வலிது என வரும் . இன்னும் `தோற்றம்' என்றதனால் , சிறுபான்மை கன்னங் கடுமை சிறுமை , தீமை , பெருமை என்ற; குணவேற்றுமைக் கண்ணும் அகரமும் மெல்லெழுத்தும் கொள்க. இக்`கன்' என்பது வேற்றுமை முடிபிற்கு மேற்கூறியது குணவேற்றுமைக்கு எனவும் , ஈண்டுக் கூறியது பொருட்பெயர்க்கு எனவும் கொள்க.2
1. கன்னம் - கன்னாரத்தொழில். (பாவாணர்). 2. கன்னம் - நோய் தணியும் பொருட்டுக் கோயிற்கு நேர்த்திக் கடனாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம் . (51)
|