இஃது ,இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயர்க்குத் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - னகாரவீற்று இயற்பெயர் முன்னர்த் தந்தை என்னும் முறைப் பெயர் வருமொழியாய் வரின் , முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறி நின்ற அகரம் கெடாது நிலைபெறும் . அ இயற்பெயர் மெய் ஒழித்து அன் கெடும் - நிலைமொழியாகிய இயற்பெயர் அவ் அன் என்னும் சொல்லின் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ் அன் தான் கெட்டு முடியும் . எ - டு : சாத்தந்தை , கொற்றந்தை என வரும் . `முதற்கண் மெய்' என்றதனால் சாத்தன்றந்தை கொற்றன்றந்தை என்னும் இயல்பு முடிபும் கொள்க. (52)
|