இஃது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஆதனும் பூதனும் - மேற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் , கூறிய இயல்பொடு பெயர் ஒற்று அகரம் துவரக் கெடும் - மேற்கூறிய செய்கையோடு நிலைமொழிப்பெயருள் அன் கெடநின்ற ஒற்றும் வருமொழியுள் ஒற்றுக்கெட நின்ற அகரமும் முற்றக்கெட்டு முடியும். எ - டு : ஆந்தை, பூந்தை என வரும். இயல்பு என்றதனால் , பெயரொற்றும் அகரமும் கெடாதே நின்று முடிந்தவாறே முடிந்தாலும் கொள்க . ஆதந்தை , பூதந்தை என வரும் . `துவர' என்றதனால் , அழான், புழான் என நிறுத்திப் பொருந்தின செய்கை செய்து அழாந்தை , புழாந்தை என முடிக்க. (53)
|