மொழி மரபு

1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு

குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடும்

35.புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.

இஃது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் நுதலிற்று.

புணர் இயல் நிலை இடையும்- இரு மொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்ணும், குறுகல் உரித்து- அவ் விகரம் குறுகுதலுடைத்து, உணரக் கூறின்-(ஆண்டை இடத்தினையும் பற்றுக்கோட்டினையும் ஈண்டு) உணரக் கூறப் புகின், முன்னர் தோன்றும்-(அது வேண்டுவதில்லை) குற்றியலுகரப்புணரியலுள் (அவ்விடனும் பற்றுக்கோடும்) தோன்றும்.

`புணரிய னிலை யிடையும்' என மொழிமாற்றி உரைக்க முன்னர்த் தோன்றுமாறு:

"யகரம் வரும்வழி யிகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது"

(குற்றியலுகரப் புணரியல்-(5))

உகரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

எ - டு: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது என வரும்.

(2)