1. மெல்லொற்று ஈறுகள்

இயற்பெயர் முன் `மகன்' முதலிய பிற பெயர்கள்

351.அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்
நிற்றலும் உரித்தே அம்மென்சாரியை
மக்கள் முறைதொகூஉம் மருங்கினான.

இஃது , மேலதற்கு வேறு ஓர் வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது .

(இ-ள்) அ பெயர் மக்கள் முறை தொகூஉம் மருங்கின் ஆன மெய் ஒழித்து அன்கெடு வழி - அவ்வியற் பெயர் மக்கள் என்னும் முறைப்பெயர் வந்து கூடும் இடத்தின் கண்ணும் பிறிதிடத்தும் தான் ஏறிய மெய்யை ஒழித்து அன்கெடும் அவ்வழி அம் என்சாரியை நிற்றலும் உரித்து - அம் என்னும் சாரியை நிற்றலும் உரித்து .

எ - டு : சாத்தங்கொற்றன் , கொற்றங்கொற்றன் எனவும் , சாத்தங்குடி , கொற்றங்குடி எனவும் வரும் .

(55)