1. மெல்லொற்று ஈறுகள்

`தான்' `பேன்' `கோன்' என்னும் இயற்பெயர்கள்.

352.தானும் பேனும் கோனும் என்னும்
ஆமுறை இயற்பெயர் திரிபிடனிலவே.

இஃது, மேலதற்கு ஒரு வழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தானும் பேனும் கோனும் என்னும் ஆ முறை இயற்பெயர் - அவ்வியற்பெயருள் தானும் பேனும் கோனும் என்னும் முறைமையினுடைய இயற்பெயர்கள் தந்தை மக்கள் என்னும் முறைப்பெயரோடு புணரும்வழி, திரிபு இடன் இல - மேற்கூறிய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும்.

எ - டு : தான்றந்தை,பேன்றந்தை,கோன்றந்தை எனவும்; தான் கொற்றன்,பேன்கொற்றன்,கோன்கொற்றன் எனவும் வரும்.

(56)