1. மெல்லொற்று ஈறுகள்

`தான்' `யான்' என்னும் சொற்கள்

353.தான்யா னெனும் பெயர் உருபியல் நிலையும்.

இஃது, விரவுப்பெயருள் தான் என்பதற்கும் உயர்திணைப் பெயருள் யான் என்பதற்கும் வேற்றுமைக்கண் தொகை மரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் -தான் என்னும் விரவுப் பெயரும் யான் என்னும் உயர்திணைப்பெயரும் மேல் தொகைமரபினுட் கூறிய இயல்புகள் ஒழித்து உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்றுத் தான் என்பது நெடுமுதல் குறுகித் தன் என்றாயும் யான் என்பது யகரம் கெட்டு ஆகாரம் எகாரமாய் என் என்றாயும் முடியும்.

எ - டு : தன்கை,என்கை,செவி,தலை,புறம்எனவும் தன்;ஞாண்;என் ஞாண்' நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும்.

(57)