இஃது, மேலவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமை அல்வழி - மேற்கூறிய தான் யான் என்னும் பெயர்கள் வேற்றுமைப் புணர்ச்சி யல்லாதவிடத்து, குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என்மனார் புலவர் - தான் என்பது நெடுமுதல் குறுகலும் யான் என்பது அவ்வாறு திரிதலும் தோற்றமின்றி இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். எ - டு : தான்குறியன்; சிறியன்,தீயன், பெரியன், ஞான்றான் , நீண்டான், மாண்டான் , எனவும்; யான்குறியேன்,சிறியேன், தீயேன்,பெரியேன்,ஞான்றேன், நீண்டேன், மாண்டேன் எனவும் வரும். `தோற்றம்' என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றித் திரிதலும் கொள்க. எ - டு : தற்புகழ்,தற்பகை எனவும் வரும். (58)
|