8. மெய்யீற்றுப் புணரியல்

`முன்' என்பதற்கு முன் `இல்'

.

356.முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
இல்லென் கிளவிமிசை றகர மொற்றல்
தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே.

இஃது, இவ்வீற்றுள் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல் - முன் என்னும் சொல்லின் முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின்மேல் றகர வொற்று வந்து முடிதல், தொல் இயல் மருங்கின் மரீஇய மரபு - பழையதாகிய இயல்பினையுடையவிடத்து மருவிவந்த இலக்கண முடிபு.

இது கடைக்கண் என்றாற்போல் வரூஉம் மரூஉ முடிபு போலன்றி முன்னில் என ஒற்றிரட்டி முடியற்பாலது. இரு மொழிக்கும் இயல்பிலதோர் ஒற்றுமிக்கு முடிந்த மரூஉ முடிபு.

(60)