இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) பொன் என் கிளவி ஈறு கெட முன்னர் முறையின் லகாரம் மகாரம் தோன்றும் - பொன் என்னும் சொல் பகரமுதன்மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் னகரம்கெட அதன்முன்னர் முறையானே லகரமும் மகரமும் தோன்றி முடியும்; செய்யுள் மருங்கின் தொடர் இயலான - (யாண்டெனில்,) செய்யுளிடத்துச் சொற்கள் தம்மில் தொடர்ச்சிப் படும் இயல்பின்கண். `முறையின் ' என்றதனால் , லகரம் உயிர்மெய்யாகவும் மகரம் தனி மெய்யாகவும் கொள்க. எ - டு : "பொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி " என வரும். `தொடரியலான' என்றதனான் பகரம் அல்லாத வன்கணத்துக் கண்ணும் சிறுபான்மை ஈறுகெட்டு லகரமும் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தும் மிக்குமுடிதல் கொள்க. பொலங்கலம்,பொலஞ்சுடர், பொலந்தேர் என வரும். `ஒன்றின முடித்தல்' என்பதனால், பொலநறுந்தெரியல், பொல மலராவிரை என்றாற்போல வரும், பிறகணத்து முடிபும் கொள்க. (61)
1.பொல் - பொன்=அழகு, அழகிய உலோகம் என்றுமாம். பொல்+அம்=பொலம். பொல்பு=பொற்பு- அழகு. பொல்லுதல் = பொருந்துதல். அழகாயிருத்தல். ஒ. நோ: ஒப்பித்தல். பொருந்தச் செய்தல், அலங்கரித்தல், பொல்லாத - பொல்லா = பொருந்தாத அழகில்லாத, " பொல்லாக் கருங்காக்கை" என்று காரிகையாசிரியருங் கூறுதல் காண்க. (பாவாணர்.).
|