2. இடையொற்று ஈறுகள்

வேற்றுமையின் யகர ஈறு

358.யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே.

இது, யகாரவீற்றிற்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் - யகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகும் - வல்லெழுத்து முதன் மொழி வந்து இயையின் அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : நாய்க்கால்; செவி, தலை , புறம் என வரும்.

(62)