மொழி மரபு

1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு

தனிமொழிக் குற்றியலுகரத்திற்கு இடனும் பற்றுக்கோடும்

36.நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழியீற்றும்
குற்றியலுகரம் வல்லா றூர்ந்தே.

இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று.

நெட்டெழுத்து இம்பரும்- நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும்-தொடர் மொழியது இறுதியினும், குற்றியலுகரம் வல்லாறுஊர்ந்து (நிற்றல் வேண்டும்)- குற்றிய லுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து (நிற்றலை வேண்டும் ஆசிரியன்.)

"தந்து புணர்ந்துரைத்தல்"(மரபு-110) என்னும் தந்திரவுத்தியான், முன்னின்ற `நிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது.

எ - டு: நாகு, வரகு என வரும்.

நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம், வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று.

(3)