2. இடையொற்று ஈறுகள்

அதற்கு மேலும் ஒரு முடிபு

360.மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே.

இது, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாறு முடியுமென எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) மகன் வினை கிளப்பின் முதல்நிலை இயற்று - அத் தாய் என்னும் சொல் மகனது வினையைக் கிளந்து சொல்லு மிடத்து இவ்வீற்று முதற்கண் கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : மகன்றாய்க் கலாம்; செரு ,தார், படை என வரும்.

`மகன்வினை' என்றது, மகற்குத் தாயாற் பயன்படும் நிலைமையன்றி, அவளோடு பகைத்த நிலைமையை.

(64)