இஃது, இவ்வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப - யகர வீற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். எ - டு : நாய்கடிது; சிறிது , தீது, பெரிது என வரும். `எல்லாம்' என்றதனால், இவ்வீற்று உருபு வாராது, உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும், வினையெச்சமுடிபும், இரு பெயரொட்டுப் பண்புத்தொகை முடிபும், அல்வழியுறழ்ச்சி முடிபும் கொள்க, அவ்வாய்க்கொண்டான், இவ்வாய்க்கொண்டான், உவ்வாய்க்கொண்டான்; எவ்வாய்க்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும்; தாய்க்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; பொய்ச்சொல், மெய்ச்சொல் எனவும்; வேய்கடிது, வேய்க்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும். (66)
|