2. இடையொற்று ஈறுகள்

`ஆர்' `வெதிர்' `சார்' `பீர்' என்னும் சொற்கள்

364.ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்.

இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஆரும் வெதிரும் சாரும் பீரும் - ஆர் என்னும் சொல்லும், வெதிர் என்னும் சொல்லும் சார் என்னும் சொல்லும், பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்கு முடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும்.

எ - டு : ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கோடு; செதிள், தோல் , பூ என வரும்.

'மெய்பெற' என்றதனான், பிறவும் மெல்லெழுத்து மிகுதல் கொள்க.

குதிர்ங்கோடு,துவர்ங்கோடு; செதிள்,தோல், பூ என வரும்.

இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப் பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும் கொள்க.

(68)