இஃது, அவ்வீற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அல்வழி எல்லாம் உறழ்என மொழிப - அவ்வீறு அல்வழிக்கணெல்லாம் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் என்று சொல்லுவர் புலவர். எ - டு : கல்குறிது, கற்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும். `எல்லாம்' என்றதனால், கல்குறுமை, கற்குறுமை எனக் குணம் பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க. இன்னும் அதனானே, இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க. வந்தானாற்கொற்றன் என வரும். இன்னும் அதனானே, அக்காற்கொண்டான்,இக்காற்கொண்டான், உக்காற்கொண்டான் எக்காற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபும் கொள்க. இதனால் பிறவும் உள்ளவாறு அறிந்து ஒட்டிக்கொள்க (73)
|