மொழி மரபு

1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு

புணர்மொழிக் குற்றியலுகரம் தன் மாத்திரையில் குறுகல்

37.இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.

இஃது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

இடைப்படினும் குறுகும் இடன் உண்டு- அவ் வுகரம் புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு, (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிந்த புணரியலான- அதன் புணர்ச்சி முறைமை அறியும் குற்றியலுகரப் புணரியலின் கண்ணே.

`இடைப்படினும் குறுகும்' என மொழி மாற்றி உரைக்க. அக்குற்றியலுகரப் புணரியலுள்

"வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே"

(குற்றியலுகரப் புணரியல்-4)

என்பதனுள் வல்லொற்றுத்தொடர் மொழியீற்று வல்லெழுத்து வருவழியும் இடம். அவ்வல்லொற்றுத் தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

எ - டு: செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும்.

`இடன்' என்றதனான், இக்குறுக்கும் சிறுபான்மை என்றுணர்க.

(4)