1. மெல்லொற்று ஈறுகள்

லகார மெய் ஆய்தமாதல்

370.தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே.

இஃது, மேலதனுள் ஒரு கூற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தகரம் வரும் வழி - அவ்வாறு றகாரமாய்த் திரிந்த லகாரம் தகரமுதல்மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையலும் புகர் இன்று என்மனார் புலவர் - அவ்வாறு றகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த் திரிந்து நிற்றலும் குற்றமின்றென்று சொல்லுவர் ஆசிரியர்.

எ - டு : கஃறீது, கற்றீது என வரும்.

`புகரின்று' என்றதனால், `நெடியத னிறுதி' (சூத் - 75) என்பதனுள், வேறீது, வேற்றீது என்னும் உறழ்ச்சிமுடிபுங் கொள்க.

(74)