1. மெல்லொற்று ஈறுகள்

நெல் முதலிய சொற்கள்

372.நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.

இஃது, இவ்வீற்று அவ்வழியுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்- நெல் என்னும் சொல்லும் செல் என்னும் சொல்லும் கொல் என்னும் சொல்லும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இவை நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல - அல்வழியைச் சொல்லுமிடத்தும் தம் வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும்.

எ - டு : நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது,தீது, பெரிது என வரும்.

(76)