இது, மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்துப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) நாயும் பலகையும் வரூஉம் காலை-மேல் நின்ற வல் என்பதன்முன் நாய் என்னும் பலகை என்னும் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரம் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாதே நின்று முடிதலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரம் கெடுவழி அகரம் நிலையும் - அவ்வுகரம் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும். எ - டு : வல்லநாய், வல்லப்பலகை என வரும்1 `அகரம் நிலையும்' என்னாது `உகரம் கெடும்' என்றதனால், பிற வருமொழிக் கண்ணும் அவ் அகரப்பேறு கொள்க. எ - டு : வல்லக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். (79)
1. உம்மை எதிர்மறையாகலான், உகரம் கெடாதே நின்று வல்லுநாய், வல்லுப்பலகை என வருதலுங் கொள்க. (நச்.)
|