2. இடையொற்று ஈறுகள்

வேற்றுமையில் வகர ஈறு

379.சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த உருபியல் நிலையும்.

இஃது, வகாரவீற்றுப் பெயர் நான்கினும் சுட்டுமுதல் வகரம் மூன்றற்கும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) சுட்டுமுதலாகிய வகர இறுதி - சுட்டெழுத்தை முதலாகவுடைய வகர வீற்றுச்சொல் .முற்படக்கிளந்த உருபு இயல் நிலையும் - வேற்றுமைக்கண் முற்படச்சொன்ன உருபு புணர்ச்சியின் இயல்பு நிலைபெற்று வற்றுப் பெற்றுப் புணரும்.

எ - டு : அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு; செவி, தலை, புறம் என வரும்.

`முற்படக்கிளந்த' என்றதனான் வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க, அவற்றின் கோடு, இவற்றின்கோடு உவற்றின்கோடு; செவி, தலை, புறம் என வரும்.

(83)