2. இடையொற்று ஈறுகள்

`தாழ்' என்னும் சொல்

385.தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருதல் உரித்து மாகும்.

இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தாழ் என் கிளவி கோலொடு புணரின்- தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்து- வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடை வந்து முடிதலும் உரித்து.

எ - டு : தாழக்கோல் என வரும்.

(89)