2. இடையொற்று ஈறுகள்

குமிழ் என்னும் மரப்பெயர்

387.குமிழென் கிளவி மரப்பெய ராயின்
பீரென் கிளவியோ டோரியற் றாகும்.

இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்- குமிழ் என்னும் சொல் குமிழ்த்தல் என்னும் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும்- பீர் என் கிளவியோடு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பெற்று முடியும்.

எ - டு : குமிழங்கோடு; செதிள்,தோல்,பூ என வரும்.

`ஓர் இயற்று' என்றதனால், பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க.

மகிழங்கோடு என வரும்.

(91)