2. இடையொற்று ஈறுகள்

ஏழ் என்னும் எண்ணுப்பெயர்.

389.ஏழென் கிளவி உருபியல் நிலையும்.

இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏழ் என் கிளவி- ஏழ் என்னும் எண்ணுப் பெயரது இறுதி, உருபு இயல் நிலையும்- உருபு புணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நிலைபெற்று (அன்பெற்று) முடியும்.

எ - டு : ஏழன் காயம்; சுக்கு , தோரை , பயறு என வரும்.

இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க.

(93)