இஃது, மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்) அளவும் நிறையும் எண்ணும் வருவழி - (அவ் ஏழ் என்னும் எண்ணுப்பெயர்) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் (வருமொழியாய்) வருமிடத்து, நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும் ஆசிரியர்க்கு கடிநிலை இன்று - நெடுமுதல் குறுகுதலும் (ஆண்டு) உகரம் வருதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமை இன்று. எ - டு : எழுகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு, பலம் எனவும்; எழுகழஞ்சு ; தொடி, பலம் எனவும்; எழுமூன்று , எழுநான்கு எனவும் வரும். `நிலையின்று' என்றதனான், வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க. எழுகடல், சிலை, திசை, பிறப்பு என வரும். (94)
|