2. இடையொற்று ஈறுகள்

ஏழ் முன் அளவு முதலிய பெயர்கள்

394.ஐஅம் பல்லென வரூஉம் இறுதி
அல்பெய ரெண்ணு1 மாயியல் நிலையும்.

இதுவும் , மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது.

(இ-ள்) ஐ அம் பல் என வரும் இறுதி அல்பெயர் எண்ணும் - (அவ் ஏழ் என்னும் எண்தான் ) ஐ என்றும் அம் என்றும் பல் என்றும் வருகின்ற இறுதிகளையுடைய (பொருட்பெயர்) அல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பனவும்(வந்தால்), ஆ இயல் நிலையும் - (நெடுமுதல் குறுக்கம் இன்றி உகரம் பெறாது) அவ் இயல்பின் கண்ணே நின்று முடியும்.

எ - டு : ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம் , ஏழாம்பல் என வரும்.

(98)

1.(பாடம்) ரெண்ணினும்.(நச்.)