2. இடையொற்று ஈறுகள்

`கீழ்' என்னும் சொல்

396.கீழென் கிளவி உறழத் தோன்றும்

இஃது , இவ் ஈற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) கீழ் என் கிளவி உறழத் தோன்றும் - கீழ் என்னும் சொல் உறழ்ச்சியாகத் தோன்றி முடியும்.

எ - டு : கீழ்குளம், கீழ்க்குளம் என வரும்.

`தோன்றும்' என்றதனான் நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க. (ஆங்கு) இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க.

எ - டு : கீழுகுளம்; சேரி,தோட்டம்,பாடி என வரும்.

(100)