இஃது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அல்வழி எல்லாம் உறழ் என மொழிப - (ளகார ஈற்று) அல்வழிகளெல்லாம் (திரிந்தும் திரியாதும்) உறழ்ந்து முடியும் என்று சொல்லுவர் (புலவர்). எ - டு : முள்கடிது, முட்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். `எல்லாம்' என்றதனால். குணவேற்றுமைக்கண்ணும் இவ்வுறழ்ச்சி கொள்க. முள்குறுமை, முட்குறுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்; கோள்கடுமை,கோட்கடுமை எனவும் வரும். இன்னும் அதனானே, உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபும் கொள்க. 1அதோட்கொண்டான், இதோட்கொண்டான், உதோட்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். (103)
1. அதோள் இதோள் முதலியன, அவ்விடத்து இவ்விடத்து எனச் சுட்டுவினாவிடப் பொருள்படுவன (பாவாணர்.)
|