இஃது, அவ்வொருமொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உருவினும்- ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும், இசையினும்- ஓசையின் கண்ணும், அருகித் தோன்றும்- சிறுபான்மையாய்த் தோன்றும், குறிப்பு மொழியெல்லாம்- குறிப்பு மொழிகளெல்லாம்,1 எழுத்தின் இயலா-ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டும் எழுத்துப்போல நடவா. (அஃது எக்காலத்துமோவெனின், அன்று) ஆய்தம் அஃகாக் காலையான- அவ்வாய்தம் தன் அரைமாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவம் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு ) நீண்டகாலத்து அந்நீட்சிக்கு. எ - டு: `கஃறென்றது' என்பது உருவு, `சுஃறென்றது' என்பது இசை. (7)
1. நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தந் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும் அவையொழிந்த எல்லா மொழிகளும். (நச்.)
|