1. மெல்லொற்று ஈறுகள்

`மக்கள்' என்னும் சொல்.

405.மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவியும்1
தக்கவழி அறிந்து வலித்தலு முரித்தே.

இஃது, மக்கள் என்னும் உயர்திணைப் பெயருக்கு "உயிரீறாகிய வுயர்திணைப் பெயரும்" (தொகை மரபு - சூத்திரம் 11) என்பதனுள் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) மக்கள் என்னும் பெயர்நிலைக் கிளவி - மக்கள் என்னும் பெயர்ச்சொல்லின் இறுதி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து - (இயல்பே யன்றித்) தக்க இடம் அறிந்து வல்லொற்றாய்(த் திரிந்து) முடிதலும் ஆம்.

`தக்க வழி' என்றதனால் அம்மக்கள் உடம்பு, உயிர்நீங்கிய காலத்து இம்முடிபு எனக் கொள்க.

எ - டு : மக்கட்தொகை; செவி, தலை,புறம் என வரும்.

(109)

1.(பாடம்) பெயர்ச்சொலிறுதி.(நச்.)