3. புறனடை

இவ்வியலின் புறனடை

406.உணரக் கூறிய புணரியல் மருங்கின்
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே.

இஃது, இவ்வோத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உணரக் கூறிய -உணரக் கூறப்பட்ட புள்ளியீறு (கள்), புணர் இயல் மருங்கின் - (வருமொழியோடு) புணரும்இயல் பிடத்து, கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளல்-(மேல் முடித்த முடிபுகளேயன்றி வழக்கினுள்) கண்டு முடித்தற்குரிய பிற முடிபுகளைக் கருதிக்கொண்டு முடிக்க.

எ - டு : விழன்குளம்; சேறு,தரை.பழனம் என இவை னகார ஈற்று வேற்றுமைக்கண் திரியாது இயல்பாய் முடிந்தன.

பொன்னப்பந்தம் என்பது அவ்வீறு அக்குப்பெற்று முடிந்தது.

நீர் குறிது; சிறிது, தீது, பெரிது என்பது ரகார ஈற்று அல்வழி முடிபு.

வேர்குறிது; வேர்க்குறிது (என்பது) அவ்வீற்று அல்வழி உறழ்ச்சி.

அம்பர்க்கொண்டான், இம்பர்க்கொண்டான், உம்பர்க்கொண்டான், எம்பர்க்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என்பன அவ்வீற்றுள் உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபு.

தகர்க்குட்டி என்பது அவ்வீற்று இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகிய அல்வழி முடிபு.

வடசார்க்கூரை, தென்சார்க்கூரை என்பன அவ்வீற்று இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ முடிபு.

உசிலங்கோடு, எலியாலங்கோடு என்பன லகார ஈற்று அம்முப் பேறு.

கல்லம்பாறை என்பது அவ்வீற்று அல்வழி அம்முப்பேறு.

அழலத்துக்கொண்டான் என்பது அவ்வீற்று அத்துப்பேறு.

அழுக்கற்போர் என்பது அவ்வீற்று அல்வழித்திரிபு.

யாழ்குறிது; சிறிது, பெரிது என்பன ழகார ஈற்று அல்வழி முடிபு.

வீழ்குறிது, வீழ்க்குறிது என்பன அவ்வீற்று அல்வழி உறழ்ச்சி.

தாழப்பாவை என்பது அவ்வீற்று அல்வழி அக்குப்பேறு.

இனி "உணரக்கூறிய" என்றதனால், குளத்தின் புறம் மரத்தின் புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலும் கொள்க.

இனிக்"கண்ணினர்" என்றதனால், ஒருநாளைக் குழவி என ளகர ஈறு ஐ என்னும் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிந்தன கொள்க.

பிறவும், இவ்வோத்தின் வேறுபட வருவனவெல்லாம் இதன் அகத்து முடித்துக்கொள்க.

(110)
எட்டாவது புள்ளி மயங்கியல் முற்றிற்று