9. குற்றியலுகரப் புணரியல்

குற்றியலுகர ஈறுகட்குரிய புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், குற்றியலுகர ஈறு வருமொழியோடு புணரும் இயல்பு உணர்த்தினமையின் குற்றியலுகரப் புணரியல் எனப்பட்டது.

1. குற்றியலுகரத்தின் இயல்பு

குற்றியலுகரத்தின் பெயர், முறை, தொகை

407.ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்.

இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், இக்குற்றியலுகரம் வரும் இடத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஈர் எழுத்து ஒரு மொழி - இரண்டு எழுத்தாலாகிய ஒரு மொழியும், உயிர்த்தொடர் - உயிர்த்தொடர்மொழியும், இடைத்தொடர் - இடைத்தொடர் மொழியும், ஆய்தத்தொடர்- ஆய்தத்தொடர் மொழியும், வன்தொடர் - வன்தொடர்மொழியும், மென்தொடர் - மென்தொடர்மொழியும் , ஆ இரு மூன்று - (ஆகிய ) அவ் ஆறு (என்று சொல்லப்படும்), உகரம் குறுகு இடன் - உகரம் குறுகி வரும் இடன்.

எ - டு : நாகு, வரகு,தெள்கு,எஃகு,கொக்கு,குரங்கு என வரும்.

(1)